கொழும்பில் நிரந்தரமாகவும் தற்காலிக தேவைகளுக்காகவும் தங்கியிருக்கும் தமிழர்களை வெளியேற்றுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கையின் ஆரம்பகட்ட முயற்சியாகவே லொட்ஜ்களில் தங்கியிருப்போரை உடனடியாக வெளியேற வேண்டுமென விடுக்கப்பட்ட கண்டிப்பான உத்தரவாகும். கொழும்பில் பிரதான மையப் பகுதியான புறக்கோட்டைப் பகுதியிலுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட லொட்ஜ் உரிமையாளர்களை கடந்த வியாழக்கிழமை புறக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மறுநாள் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்த இடமாகக் கொண்ட தமிழர்களை தங்க வைக்கக்கூடாது என்றும் உடனடியாக வெளியேற்றுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவைமீறி எவராவது தங்கியிருந்தால் அவர்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றிச் சொந்த இடங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொலிஸாரின் இந்தத் திடீர் உத்தரவு காரணமாக லொட்ஜ் உரிமையாளர்கள் மாத்திரமன்றி அங்கு தங்கியிருப்பவர்களும் செய்வதறியாது திகைத்துப்போன நிலைமைக்குத் தள்ளப்பட்டனர்.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது சொந்தத் தேவைகளின் நிமித்தம் தலைநகர் கொழும்புக்கு வரும்வேளையில் உறவினர், நண்பர்கள் வீடுகள் இல்லாத பெரும்பாலானோர், தனியார் லொட்ஜ்களில் தினமும் பணம் செலுத்தி தங்கியிருக்க வேண்டிய தேவையென்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
அரச அலுவலகத் தேவைகள், நேர்முகப் பரீட்சை, வெளிநாட்டுப் பயணம், வைத்தியசிகிச்சை, ஊழியர் சேமலாபப்பணம் மீளப் பெறல், வெளிநாடுகளிலிருந்து வரும் உறவினர், நண்பர்களை அழைத்துச்செல்வது போன்ற பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்காக தலைநகர் கொழும்புக்கு வடக்கு, கிழக்கு, மலையகத்தைச்சேர்ந்த தமிழர்கள் மாத்திரமல்ல, நாடு பூராவுமுள்ள அனைத்து இன மக்களும் வரவேண்டியது அவசியமானதொன்றாகும். இது தவிர்க்க முடியாத ஒரு தேவையாகும்.
இந்த நிலையிலேயே தலைநகர் கொழும்பிலுள்ள லொட்ஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அப்புறப்படுத்துவதற்கான அழுத்தம், ஆளும் கட்சியினரால் பொலிஸார் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படை நெறிகளுக்கு அப்பாற்பட்ட இந்த கடுமையான உத்தரவு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் ஊடகங்களும் கடும் சீற்றத்தை வெளியிட்டதையடுத்து சந்தேகத்திற்கிடமானவர்களையும் காரணமின்றி தங்கியிருப்பவர்களையுமே வெளியேற்றுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரிகளும் அரசாங்கத் தரப்பினரும் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக கேள்விப் பட்டவுடன் முதன்முதலில் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் அமைப்பாளருமான மனோ கணேசன் எம்.பி., புறக்கோட்டைப் பொலிஸாருடன் தொடர்பு கொண்ட போது, இது எமது தன்னிச்சையான நடவடிக்கையல்ல, மேலிடத்தின் உத்தரவின் பேரிலேயே இவ்வாறு அறிவித்துள்ளோம் என்று பதிலளிக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பாக ஏனைய தமிழ் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி செயலகம் என்பவற்றுடன் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கிக் கூறியதையடுத்து, தேவையின் நிமித்தம் உரிய ஆதாரங்களுடன் உள்ளவர்கள் இதிலிருந்து விலக்களிப்பட்டுள்ளார்கள் என்று இணக்கம் காணப்பட்டுள்ள போதிலும் இதுவொரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளது.
லொட்ஜ்களில் தங்கியிருப்பவர்கள் அவ்வப்பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தங்கியிருப்பதற்கான காரணங்கள் தெரிவிக்கப்பட்டு புகைப்படம் ஒட்டப்பட்ட பொலிஸ் பதிவு நடைமுறைக்கமையவேயுள்ளன.
இதனைவிட, இராணுவத்தினரும் லொட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பெற்றுள்ளனர். இவ்வாறான பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றிய நிலையிலேயே இவ்வாறான திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டை, குணசிங்கபுரம், ஆட்டுப்பட்டித் தெரு, செட்டியார் வீதி, கதிரேசன் வீதி, கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை, ஆமர் வீதி, மெசஞ்சர் வீதி, புதிய சோனகத்தெரு, பழைய சோனகத்தெரு ஆகிய பகுதிகளிலேயே பெருமளவிலான லொட்ஜ்கள் உள்ளன.
இதனைவிட, மருதானை, கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை போன்ற பகுதிகலுமாக சுமார் நூற்றுக்கு மேற்பட்ட லொட்ஜ்கள் தலைநகர் கொழும்பில் உள்ளன.
இவ்வாறான லொட்ஜ்களில் தங்குபவர்களில் பெருமளவிலானோர் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பெருமளவிலான லொட்ஜ்கள் எந்தவொரு அடிப்படை வசதிகளுமற்ற நிலையிலேயே காணப்படுவதுடன் பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் கெடுபிடி, சுற்றிவளைப்பு தேடுதல்களுக்கும் அடிக்கடி உள்ளாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
லொட்ஜ்களில் தங்கியிருந்த பல தமிழ் இளைஞர்கள் கடந்த காலங்களில் காணாமல் போன சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதுடன் பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனைவிட, வெளிநாடு சென்று இடைநடுவில் திரும்பிய பலரும் வெளிநாட்டுப் பயணத்திற்காக காத்திருப்பவர்களும் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் லொட்ஜ்களில் தமது எதிர்காலத்தை தொலைத்துவிட்டு காத்திருக்கின்ற பரிதாபகரமான நிலைமையையும் காணக்கூடியதாகவுள்ளது. இதைவிட, ஏ-9 வீதி மூடப்பட்டுள்ள நிலையில் லொட்ஜ்களில் தங்கியுள்ள யாழ். குடாநாட்டைச் சேர்ந்த பெருமளவிலானோர் எவ்வாறு தமது சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல முடியும்? விமானப்பயணத்திற்குப் பெருமளவிலான பணத்தைச் செலவழிக்கும் நிலையில் பலனில்லை.
அது மட்டுமன்றி, கப்பல்பயணம் மூலமாக யாழ்.குடாநாடு செல்வதென்றாலும் அதற்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இவ்வாறான மிகவும் சிக்கலான நெருக்கடியான நிலைமைகளுக்கு மத்தியில் பாதுகாப்பு காரணங்கள் என்ற போர்வையில் லொட்ஜ்களை மூடி, தமிழ்மக்களை அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கையானது அப்பட்டமான மனித உரிமைமீறலாகும்.
இதெல்லாவற்றுக்குமப்பால் தலைநகர் கொழும்பில் பெருமளவில் தங்கியிருக்கும் வடக்கு - கிழக்குத் தமிழர்களால் தேசிய பாதுகாப்புக்கும் தலைநகர் கொழும்பினது பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சுற்றித்திரியும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் விக்ரர் பெரேரா தெரிவித்துள்ளார்.
காரணமின்றி தலைநகர் கொழும்பில் லொட்ஜ்களிலும் ஏனைய இடங்களிலும் தங்கியுள்ள தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு திரும்பிச்செல்ல வேண்டும். இல்லையேல், அவர்கள் பொலிஸாருக்கு உரிய பதிலளிக்க வேண்டுமெனவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
1998 இல் அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவின் ஆட்சியின் போதும் லொஜ்களில் தங்கியிருந்த வடக்கு- கிழக்கு மற்றும் மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள் வீதிக்கு வெளியேற்றப்பட்டு குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் அந்தரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான புதிய ஆட்சியதிகாரத்திற்குப் பின்னர் தலைநகர் கொழும்பில் கடத்தல், கைது, காணாமல்போதல் அதிகரித்து, தமிழர்களின் பொருளாதார இலக்குகள் குறிவைக்கப்பட்டு, தமிழ் வர்த்தகர்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் லொட்ஜ்களில் வசிக்கும் தமிழர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு, கிழக்கில் தோன்றியுள்ள யுத்த சூழ்நிலை, மனித உரிமை மீறல் என்பவற்றிலிருந்து தப்பியோடி தலைநகர் கொழும்புக்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் தப்பியோடி வரும் தமிழர்கள் இனி எங்கே போவது அடைக்கலம் தேடி....
No comments:
Post a Comment