Tuesday, March 4, 2008

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்கள் - 2008

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் விடுத்த வேண்டுகோளின் முழு வடிவம் கீழே உள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
தயவான வேண்டுகோள்.

அன்புடையீர்,

நான் அகிம்சை வழிமுறைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டவன். எனது 55 ஆண்டு அரசியல் வாழ்வும் அதன் வழி அமைந்ததே.

சகோதரப்படுகொலைகளும், அப்பாவிகள், புத்திஜீவிகள் ஆகியோரின் கொலைகளும் ஆரம்பித்ததன்; பின்னர் ஆயுதப்போராட்டத்தை முற்று முழுதாக நிராகரித்தேன். தமிழீழ விடுதலைப்புலிகள் தான் இந்த கலாச்சாரத்தின்; ஆரம்பகர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். வெவ்வேறு இயக்கங்கள் கூட தங்களை புலிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக ஏதோ ஒரு அளவில் இக்கலாச்சாரத்திற்கு ஆட்பட்டது துரதிஸ்டமானதே.

கிழக்கில் வாழும் மக்கள் சுனாமிப் பேரழிவுகளாலும், யுத்தத்தின் தாக்கங்களாலும்; மிகப்பெரிய அழிவுகளையும், இழப்புக்களையும் சந்தித்து சொந்த இடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது. கணிசமானோர் மீண்டும் தங்களின் ஊர்களுக்குத் திரும்பியிருந்தாலும் இன்னமும் நிம்மதியான, அமைதியான வாழ்வு கிட்டாது துன்பப்படுகிறார்கள். குறைந்த பட்ச அமைதிச் சூழல் உருவாக்கப்படாத நிலையிலும், ஆயுதக் காலச்சாரமும் முற்றாக ஒழிக்கப்படாத நிலையிலும் தேர்தல் உங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் மக்களின் கருத்துக்களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த தேர்தல் ஒரு முக்கிய வழிமுறையாக இருப்பினும் இத்தேர்தல் மூலம் உருவாகும் சபைகள் நீங்கள் எதிர்நோக்கும் பிரமாண்டமான பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வைக் கண்டு விடும் என நான் நம்பவில்லை.

எவ்வாறாயினும் இங்கு தமிழ் மக்கள் தாம் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பதற்கு இத்தேர்தலில் வாக்களிப்பது தமிழ் மக்களின் கடமையாகும்.

வடபகுதி மக்கள் கடந்த காலத்தில் தமது தலைமையை என்றும் கிழக்கு மாகாணத்தின் மீது திணிக்கவில்லை. அதற்கு மாறாக தலைமையை பகிர்ந்து தான் வாழ்ந்து வந்திருக்கிறோம். தமிழன் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தமிழனே. இதில் வடக்கென்ன? கிழக்கென்ன? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இது எமது தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கிறது. எமக்குள் வேற்றுமைகள் வேண்டாம். தந்தைசெல்வா காலத்திலிருந்தே காலத்துக்குக்காலம் தமிழ் மக்களின் தலைமை வடக்கிலும் கிழக்கிலும் மாறி மாறி இருந்திருக்கிறது. வடக்கின் தலைமையை கிழக்கு மக்களும், கிழக்கின் தலைமையை வடபகுதி மக்களும் ஏற்று மதித்து பரஸ்பர உறவுடன் வாழ்ந்து வந்ததே வரலாறாகும். கிழக்கைச் சேர்ந்த கௌரவ இராசதுரை, அமரர்களான ஏகாம்பரம், இராசமாணிக்கம், இராசவரோதயம் போன்றோரின் தலைமையை வடபகுதி மக்கள் ஏற்று மதித்து வந்தார்கள். அதேபோலவே அமரர்களான தந்தைசெல்வா, சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகியோரின் தலைமையை கிழக்கு மக்கள் மதித்தும் ஏற்றும் வந்தனர். எனது அருமை நண்பன் சொல்லின் செல்வன் செ.இராசதுரை அவர்களையும் அவரது பேச்சாற்றலையும் வடபகுதி மக்கள்; தம் உள்ளத்தில் இன்றும் அழியாத நினைவுகளாக வைத்துள்ளனர். அதே போன்றே வடபகுதி தலைவர்களும்; உங்கள் உள்ளங்களில் காலத்தால் மாறாத இடம்பிடித்துள்ளனர்;.

பல்வேறு வகையிலும் இத் தேர்தலின் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள் தமிழர்கள் மத்தியில் நிலவும் ஆயுதக் கலாச்சாரத்தையும், வன்முறைகளையும், தலைமைப் போட்டிகளையும் தமக்குச் சாதகமாகப் பாவித்து வந்திருக்கிறார்கள். இதே நிலை தொடரவேண்டுமா? தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதை இழுத்தடிப்பதற்கான உபாயமாக அது கையாளப்பட்டு வந்திருக்கிறது.

கணவன்மாரை இழந்த அப்பாவி மனைவியர், மனைவிமாரை இழந்த துர்ப்பாக்கியமான கணவன்மார், அன்னை தந்தையரை இழந்து அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், அனாதரவான முதியோர் என எமது சமூக வாழ்வு மிக அவலமானதாகியுள்ளது. அதுமட்டுமல்ல நாம் உற்றார் உறவினரை இழந்துள்ளோம். குடும்பங்கள் சிதைக்கப்பட்டு கணவர் ஒருநாட்டிலும் பிள்ளைகள் வெவ்வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர். நாம் சொத்து சுகங்களை இழந்து நிற்கிறோம்;. பிள்ளைகளின் கல்வியைப் பறித்து புத்தகம் இருந்த கைகளில் துப்பாக்கியைத் திணித்து போர்க்களத்தில் பலிகொடுக்கின்றனர். இங்கு சொத்துக்களை இழந்து ஓட்டாண்டிகளோர் பல்லாயிரம். போதியளவு நிலமிருந்தும் பயிர்செய்யமுடியாமலும், செய்ததை சந்தைப்படுத்தமுடியாமலும் நீளமான கடலிருந்தும் முறையான தொழில்புரியும் நிலைமை இல்லாததாலும் குட்டிச்சுவரான குடும்பங்கள் எத்தனையோ ஆயிரம். சுதந்திரமாக உழைத்து சம்பாதித்து தன்மானத்தோடு வாழ்ந்த மக்கள் இன்று கையேந்தி வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு என்ற பேதமின்றி எம் அனைவரதும் நிலைமை இதுவேதான்.

வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் இந்த யுத்தம் மற்றும் வன்முறைகளால் அனுபவித்த துன்பங்கள் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடவில்லை. ஒரே விதமான கஸ்டங்களையும் துன்பங்களையும் அனைத்துப் பகுதி; மக்களும் எதிர் நோக்கி நிற்கிறார்கள். ஏறக்குறைய 25 ஆண்டுகளாக வடக்கிலும் சரி ,கிழக்கிலும் சரி மக்கள் சுதந்திரமான ஒரு தேர்தலை சந்திக்கவில்லை. நடைபெற இருக்கும் தேர்தல் கூட சுதந்திரமான தேர்லாக நடைபெறாது போனால் கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவில்லை என்றே உலகம் கூறும். 25 வருடங்களுக்கு மேல் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்து விட்ட மக்களுக்கு இனியாவது உண்மையான விடிவு ஏற்பட்டு விட்டதாக எண்ணக் கூடிய நிலை உருவாக வேண்டும். சுதந்திரமாக மக்கள் தம் வாக்குரிமையை உபயோகிக்க அனைவரும் வழியமைத்துக் கொடுக்கவேண்டும்.

எமது இனம் நிலப்பரப்பால் கூறுபடாமல் அனைத்து இன மக்களும் பயபீதியின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான தேர்தலாகவும் இது அமைய வேண்டுமெனப் பிராத்திக்கிறேன்.

மேலும், இதனை நான் வெறுமனே ஒரு பிரதேச சபைத் தேர்தலாக மட்டும் கருதாது அடிப்படையில் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற வாக்கெடுப்பாகவே பார்க்கிறேன். 50 ஆண்டுகளுக்குப் பின்பும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதான ஒரு நியாயமான தீர்வை முன்வைத்து சிறுபான்மையினருக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது என்ற நம்பிக்கையை ஊட்டாது அந்தரத்தில் நிறுத்திய நிலையிலேயே இத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலைப்பாடே எமது ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இத்தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக ஒரே அணியில் சுயேச்சைக்குழுவாக அப்பிள் பழ சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

தமிழ் மக்கள் அனைவரும் தமது அபிலாசைகளை பிரதிபலிப்பதற்கு அப்பிள் பழ சின்னத்திற்கே வாக்களிக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.


நன்றி

அன்புடன்

வீ.ஆனந்தசங்கரி,

தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

2 comments:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Wireless, I hope you enjoy. The address is http://wireless-brasil.blogspot.com. A hug.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in