இலங்கையின் இனநெருக்கடிக்குத் தீர்வை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை தோற்றுவித்து தமிழர் தாயகத்தில் இயல்பு நிலையை தோற்றுவிக்குமென பரவலாக நம்பப்பட்டு ஏமாற்றத்தையும் விரக்தியையுமே நிலைபெறச் செய்த இலங்கை - இந்திய உடன்படிக்கைக்கு நாளையுடன் வயது 20. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவுக்கும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையில் 1987 ஆடி 29 இல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உடனடியாகவே இந்தியப் படைகள் வடக்கு,கிழக்குப் பகுதியில் வந்திறங்கின. பின்னர் அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை கொண்டு வந்து மாகாண சபைகள் உருவாக்கப்பட்டமையும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு அலகாக இணைக்கப்பட்டமையும் அதன்பின் இடம்பெற்ற மாகாண சபைத் தேர்தல்களும் வட, கிழக்கு மாகாணசபை இயங்காமல் முடக்கப்பட்டமையும் இந்தியப் படை கசப்பான அனுபவங்களுடன் திரும்பிச் சென்றமையும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சுமார் 3 ஆண்டுகளில் இடம்பெற்ற நிகழ்வுகள்.
1983 ஜூலை கலவரத்தினைத் தொடர்ந்து தென்னிந்தியாவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக தஞ்சமடைந்தனர். பின்னர் இலங்கை - இந்திய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நியாயமான தீர்வு கிடைக்கும், நிம்மதி வாழ்வு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்த தமிழ் மக்களுக்கு இலங்கை - இந்திய உடன்படிக்கை அவர்களின் அபிலாஷைகளை தீர்த்து வைப்பதாக அமையவில்லை. 2002 வரை தொடர்ந்து இடம்பெற்ற உக்கிர மோதல்களினால் ஏற்பட்ட உயிர், உடைமை இழப்புகள் ஏராளம்.
2002 இல் நோர்வே அனுசரணையுடன் ஏற்பட்ட யுத்தநிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையால் 2005 நவம்பர் வரை உயிரிழப்புகள் ஏற்படவில்லையாயினும் தமிழர் தாயகத்தில் இயல்பு வாழ்வு சீர்பெறவில்லை.
யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்ந்து அமுலில் இருப்பதாகக் கூறப்படுகின்ற போதிலும் மீண்டும் கடுமையான மோதல்கள் வெடித்து தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 4 இலட்சத்திற்கும் அதிகமானோர் உள்நாட்டிலேயே அகதிகளாகியுள்ளனர்.
சர்வதேச சமூகமும் கவலையை மட்டும் வெறுமனே அவ்வப்போது தெரிவித்துக் கொள்வதுடன், தனது கடமை முடிந்துவிட்டதாக கருதும் நிலைப்பாடே தொடர்கிறது.
இந்த நிலையில், தெற்காசியப் பிராந்தியத்தின் வல்லரசும் இலங்கையில் மிக நெருங்கிய அயல் நாடுமான இந்தியா, இலங்கையின் மோதலுக்கு முடிவுகட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மிதவாதப் போக்குடைய தமிழர்கள் விரும்புவதாக ஐ.ஏ.என்.எஸ்.செய்திச் சேவை நேற்றுத் தெரிவித்திருக்கின்றது.
இலங்கை ஜனநாயக மன்றம், அகில இலங்கை தமிழ் ஐக்கிய முன்னணி, மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பு போன்றவற்றின் பிரதிநிதிகளின் அபிப்பிராயங்களை உள்ளடக்கியே ஐ.ஏ.என்.எஸ்.இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
மோதலில் சம்பந்தப்பட்டுள்ள இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான செயற்பாட்டில் வலுக்கட்டாயமாக இந்தியா தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நம்பகரமான தீர்வொன்றை புதுடில்லியால் உத்தரவாதப்படுத்த முடியுமெனவும் இலங்கையிலுள்ள ஜனநாயக பன்முகத்தன்மையை ஆதரிக்கும் சக்திகளை இந்தியாவால் வலுப்படுத்த முடியுமெனவும் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தி கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சர்வதேசத்தின் முழுமையான ஒத்துழைப்புடன் நோர்வே அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை செவ்வனே அமுல்படுத்தினால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தையென விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.
இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. அதனை முழுமையாக ஒழித்துக் கட்டிய பின்பே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்றும் அதிலும் தமிழ் மக்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்வுகாண முயற்சிக்கப்படும் என்று கொழும்பு திட்டவட்டமாக அறிவிப்புகளை விடுத்து வருகிறது. இந்த நிலையில் இந்தியா, இலங்கை விவகாரத்தில் மீண்டும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளும் சாத்தியம் அருகியே காணப்படுகின்றது. தனது பூகோள அரசியல் நலனுக்கு அப்பால் இலங்கை இன நெருக்கடி விவகாரத்தில் குறிப்பாக தமிழ் மக்கள் பிரச்சினையில் இந்தியா தன்னை மீண்டும் தீவிரமாக சம்பந்தப்படுத்திக் கொள்ளும் சாத்தியம் அறவே இல்லையெனலாம்.
ஆயினும் இந்தியா, இலங்கையின் இன நெருக்கடிக்குத் தீர்வு காணும் விடயத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்ளாவிடில், சமாதான வழியில் இணக்கப்பாடு காண்பதற்குரிய தீர்க்கமான தீர்மானம் எதனையும் கொழும்பு மேற்கொள்ளும் சாத்தியம் இல்லையென்பதும் மறுக்க முடியாத யதார்த்தமாகும்.
இரு நாடுகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின் கீழ் ஒழுங்கிணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணம் தனித்தனியே துண்டாடப்பட்டுவிட்டது. புதுடில்லியின் விருப்பத்துக்கு மாறாகவே, கொழும்பின் `காய் நகர்த்தல்' இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இந்திய அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய அதிகாரப் பகிர்வை உள்ளடக்கிய அரசியலமைப்பு மாற்றத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற இந்தியாவின் அபிப்பிராயத்தையும் வலியுறுத்தலையும் கொழும்பு செவிமடுக்குமா என்பது சந்தேகமே.
பிரிட்டனிடமிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற பின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியாக சிங்களத் தலைவர்களுக்கும் தமிழ் தலைவர்களுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள், மைக்கறை அழியுமுன்னே கிழித்து வீசப்பட்டன. அதேபோன்ற நிலமையையே சர்வதேச அனுசரணையுடனான உடன்படிக்கைகளும் எதிர்கொண்டுள்ளன. நாளையுடன் 20 வருடங்களை பூர்த்தி செய்யும் இலங்கை - இந்திய உடன்படிக்கையும் தமிழ் மக்களின் இருப்புக்கான போராட்ட வரலாற்றில் `ஒரு அத்தியாயமாக மட்டுமே' இருக்கப் போகின்றது என்பதே உண்மை.
நன்றி தினக்குரல்
No comments:
Post a Comment