Sunday, July 8, 2007

செங்கலடி தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஈபிடிபியின் ஊடக அறிக்கை

கடந்த 4.7.2007 ஆம் திகதி செங்கலடியில் உள்ள ஈபிடிபி காரியாலயம் மீது ரிஎம்விபி எனப்படும் கருணா குழுவினர் தாக்குதல் நடத்தும் நோக்கில் சென்று குண்டு வீச்சு நடாத்திய போது ஈபிடிபியினர் அவர்கள் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதில் ரிஎம்விபியின் இரு உறுப்பினர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்த செய்தி ஏற்கனவே ஈழம் நெற்றில் பதிவாகியிருந்தது.

இச் சம்பவம் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.


ஊடகங்களுக்கான அறிக்கை!...







செங்கலடியில் என்ன நடந்தது?......

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் மக்கள் நலன் சார்ந்த விருப்பங்களில் இருந்து
உண்மையின் சாட்சியங்களாக நின்று மக்களிடமும், மனிதநேய, மற்றும் ஐனநாயக சக்திகளிடமும் முறையிடுகின்றோம்.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா குழுவினர் பிரிந்து வந்தபோது அவர்களது ஐனநாயக உரிமையை மதித்து பகிரங்கமாவே அவர்களை ஐனநாயக வழி நோக்கி வரவேற்றவர்கள் நாம்!

நூறு பூக்கள் மலரட்டும் என்று மனம் மலர்ந்து வாழ்த்தியவர்கள் நாம்! ஐனநாயக வழிமுறை நோக்கி யார்தான் வருவதாக விரும்பினாலும் வரவேற்று வாழ்த்த நாம் தயார் என்று கூறியவர்கள் நாம்!

எமது அரசியல் ரீதியான உறவை கைவிட்டு கருணா குழுவினர் மாற்று முடிவினை எடுத்திருந்த போது எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்தியவர்களும் நாமே!

கருணா, பிள்ளையான் என இரு அணியாக உடைந்து நின்று இரு தரப்பும் மோதிக்கொண்ட போது, அது குறித்த கவலையை கரிசனையோடு பொது நிலையில் நின்று தெரிவித்திருந்தவர்கள் நாம்!

ஆனாலும் பலரும் எதிர்பார்த்தது போல் கருணா குழுவினரின் சகல நடைமுறைகளும் இன்று வரை விருப்பத்தக்க ஒன்றாக இருந்ததில்லை! அதற்காக நாம் அவர்களோடு எந்த சந்தர்ப்பத்திலும் பகமையுணர்வோடு முரண்பட்டவர்கள் அல்ல! தவறுகளை நேர்மையுடன் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

அண்மைக்காலங்களாக கருணா தலமையிலான குழுவினர் எம்மை பகமையுணர்வோடு நோக்குவது எம்மால் உணரப்பட்டது. மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் எமது உறுப்பினர்களை நடு வீதிகளில் நிறுத்தி அச்சுறுத்துவது, அலுவலகங்களை மூடிவிட வேண்டும் என எச்சரிப்பது, எமது தோழர்களை கடத்திச்சென்று சித்திரவதை செய்வது, எமது தோழர்களின் குடும்பத்தவர்களை மிரட்டுவது என அவர்களது பகமையுணர்வு வெளிப்பட்டு நிற்கின்றது. இதற்கான நியாயமான காரணங்கள் எதுவும் எங்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கவும் இல்லை!

இது போன்ற அச்சுறுத்தல்களில் இருந்து மீள்வதற்கு எமது தோழர்கள் உரிய அணுகு முறையில் செயற்பட வேண்டிய கட்டாயத்தில் காரியமாற்றியதால் தம்மை பாதுகாத்து வந்திருக்கின்றனர்.

எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மட்டு, அம்பாறை பிராந்தியங்களின் முக்கிய உறுப்பினர்கள் தலமை அலுவலகத்தில் நேரில் சந்தித்து எமது மக்களின் அவலங்கள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும், அரசியல் தீர்வு முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடியுள்ள நிலையில்.......

கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் அவலங்களை துடைப்பதற்கு எமது தோழர்கள் முடிந்த பணியினை தொடர்ந்து வருகின்ற நிலையில்.....

செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிறப்பு பிரதிநிதிகள் மட்டு அம்பாறை மக்களிடம் நேரில் சென்று மக்களின் அவலங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க முயன்று வருகின்ற நிலையில்......

நிகழ்ந்திருக்கவே கூடாத இந்த நிகழ்வு நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. கடந்த 04.07.07 அன்று செங்கலடியில் அமைத்திருக்கும் எமது மக்கள் பணிமனைக்குள் திடீரென வந்து இறங்கினர் கருணா தலமையிலான குழுவினர்.

பாரிய ஆயுதங்களுடன் வாகனங்களில் வந்த சுமார் 60 பேர் வரையிலான கருணா குழுவினர் பணிமனைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு நின்றிருந்த எமது தோழர்களை சுற்றி வளைத்து தாக்குதலை ஆரம்பித்தனர். எமது இரு தோழர்களை கைகளை கட்டி வாகனத்தில் பலவந்தமாக ஏற்றுவதற்கு அவர்கள் முயற்சித்த போது நிலமை மோசமடைந்தது.

கருணா தலமையிலான குழுவினர் கைக்குண்டினை வீசி எறிந்து வெடிக்க வைத்து பாரிய அளவில் துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தனர். இதில் எமது தோழர்கள் இருவர் காயமடைந்தனர்.

இந்நிலையில் எமது பணிமனையில் இருந்து நடத்தப்பட்ட தற்காப்பு தாக்குதலில் இரு கருணா குழு உறுப்பினர்கள் கொல்லப்படவும், இருவர் படுகாயமடையவும் வேண்டிய துர்ப்பாக்கியம் நிகழ்ந்து விட்டது.

கொல்லப்பட்ட தமது உறுப்பினரின் சடலத்தையும் எடுத்துக்கொண்டு திரும்பிய கருணா தலமையிலான குழுவினர்; மறுதினம் படைத்தரப்பின் ஊடாக எம்மிடம் வந்து கொல்லப்பட்ட ஏனைய உறுப்பினரின் சடலத்தையும் கைவிட்டுப்போன வாகனங்களையும், ஆயுதங்களையும் பெற்றுச்சென்றனர்.

இந்நிலையில் உதய சூரியன் படை என்ற பெயரில் கருணா குழுவினர் அச்சுறுத்தல் துண்டுப்பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். ஈ.பி.டி.பி அமைப்பை தாம் மட்டக்களப்பில் தடை செய்திருப்பதாகவும் இதை மீறி செயற்பட்டால் தாம் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் சிறுபிள்ளைத்தனமான முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து செல்வதற்கு முந்திய சில நாட்களில் நெடுத்தீவில் இருந்து ஈ.பி.டி.பி வெளியேற வேண்டும் என புலிகள் அழுத்தம் கொடுத்து ஆரப்பாட்டமும் நடத்தி வந்திருந்தனர்.

அப்போது புலிகளின் தளபதியாக இருந்த கருணா முகமாலையில் கொட்டும் மழையில், குடை பிடித்து நின்று ஊடகங்களுக்கு உணர்ச்சி வேகமுடன் பேட்டி அளித்துக்கொண்டிருந்ததையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

நெடுந்தீவில் இருந்து மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டுமல்ல, வடக்கு கிழக்கிலிருந்தே ஈ.பி.டி.பி வெளியேற வேண்டும்! இல்லையேல் வெளியேற்றுவோம் என கருணா சபதம் எடுத்திருந்த அந்த நாட்களையும் இன்று மீட்டுப்பார்க்க வேண்டியுள்ளது.

ஓத்துப்போக மறுப்பவர்களை ஒழித்துக்கட்டவும், தப்புக்கு தலையாட்ட மறுப்பவர்களை
தண்டிக்கவும் என எமது தேசத்தை ஐனநாயக மறுப்பர்கள் குத்தகைக்கு எடுக்க நினைத்தனர்.

ஐனநாயக பன்மைத்துவத்தின் குரல் வளைகளை கருவறுத்து தெருவில் எறிந்த ஏகபிரதிநித்துவம் என்ற புலிகளின் தீரா நோய் தீர்ந்துதான், கருணாவும் புலிகளிடம் இருந்து பிரிந்து வந்ததாகவே பலராலும் நம்பப்பட்டது.

ஆனாலும், செங்கலடியில் எமது மக்கள் பணிமனைமீதான தாக்குதல் முயற்சியானது இது குறித்த நம்பிக்கையீனங்களை மேலும் உருவாக்கியிருக்கின்றது.

நடந்திருக்கவே கூடாத இந்த நிகழ்விற்கு பின்னர் அனாமதேய அமைப்பின் பெயரால் ஈ.பி.டி.பி யாகிய எம்மை தாம் தடை செய்திருப்பதாக விடுத்திருக்கும் அசு;சுறுத்தலானது இந்த சம்பவங்களுக்கான உண்மையான காரணத்தையும் வெளிப்படுத்தியிருப்பதாகவே நாம் கருதவேண்டியுள்ளது.

நடந்த சம்பவங்கள் இதுவாக இருக்கும் போது, மக்கள் என்ற தளத்தில் காலூன்றி நிற்கும் ஈ.பி.டி.பி குறித்து இணையத்தளத்தில் மட்டும் தொங்குபவர்கள்; வழமை போல் விஷத்தை கொட்டியிருக்கின்றார்கள்.

நியாய பூர்வமான விட்டுக்கொடுப்புகளுக்கு ஈ.பி.டி.பி தயாராகவே இருக்கின்றது. பிரிந்து வந்த போது கைகுலுக்கி வரவேற்றது போல், ஜனநாயக பண்புகளை இதயசுத்தியுடன் பேணுவார்களேயானால் மீண்டும் கைகுலுக்கவும் ஈ.பி.டி.பி தயாராகவே இருக்கின்றது!

இந்த மண் மக்களை நேசிக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளுக்கும் சொந்த மண்!

எங்கள் மக்கள் பணியை தடுத்து நிறுத்தவும், மக்களுக்காக நாம் உழைக்கும் உரிமையை யாரும் மறுத்து நிற்பதற்கும் நாம் ஒரு போதும் அனுமதிக்கப்போவதில்லை!

சகோதரர்களின் குருதியில் கைகளை நனைக்கும் கொடிய துயரங்கள் தொடர்வதை வெறுப்போம்!
மக்களின் உரிமைக்காக உழைப்போம்!

மக்களுக்காக உழைக்கும் உரிமைக்காகவும் உழைப்போம்!
எங்கள் நிலத்தில், மக்கள் பலத்தில் என்றும் இருப்போம்!
எமது இருப்பும், விருப்பும் மக்களின் தீர்மானங்களே!

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி! 07.07.2007

No comments: