Tuesday, July 10, 2007

டக்ளஸ்ஸின் ஈபிடிபியும் கருணாவின் ரிஎம்விபியும் பகைமை தவிர்ப்பு

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஈ.பி.டி.பியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ரி.எம்.வி.பியும் இணைந்து கூட்டாக ஊடகங்களுக்கு விடுத்துள்ள பகைமை தவிர்ப்பு கூட்டறிக்கை...

ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி அமைப்பும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ரி.எம்.வி.பி அமைப்பும், நல்லெண்ணங் கொண்டவர்களும் மேற்கொண்ட முயற்சி காரணமாக பகைமையுணர்வு மறந்து இருதரப்பும் தத்தமது வழியே செயற்படுவதற்கான உடன்பாடு ஒன்று உருவாகியிருக்கின்றது. 09.07.2007 அன்று நிகழ்த்தப்பட்ட இரு அமைப்புகளினதும் உயர் மட்ட கருத்து பரிமாற்றத்தின் பின்னர் இத்தகைய சுமுக நிலைக்கான உடன்பாடு காணப்பட்டுள்ளது. இது குறித்து இரு அமைப்பினரும் இணைந்து அறிக்கை ஒன்றையும் வெளியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஐனநாயக கட்சியாகிய ஈ.பி.டி.பி அமைப்பினதும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளான ரி.எம்.வி.பி அமைப்பினதும் உறுப்பினர்களுக்கிடையில் அண்மைக்காலமாக எதிர்பாராத விதமாக கசப்புணர்வுகள் தோன்றியிருந்தன. இந்நிலையானது நிகழ்ந்திருக்கவே கூடாத சில விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு இட்டுச்சென்றதையும் ஆழ்ந்த கவலையோடு சுட்டிக்காட்டப்பட வேண்டியுள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்கான போராட்ட வரலாறெங்கும் தமிழ் பேசும் தரப்பினரே ஒன்றுடன் ஒன்று மோதி இன்று வரை தீராத வடுக்களை உருவாக்கி தந்திருக்கின்றது. ஆயுதப்போராட்டத்தை கைவிட்டு அரசியல் தீர்வு நோக்கி உழைத்து வரும் அமைப்புகளுக்கிடையில் இது போன்ற பகமை உணர்வுகளும் அதற்கான செயற்பாடுகளும் உருவாகுமாயின் அது தமிழ் பேசும் மக்களின் நலன்களையே பெரிதும் பின்னடைவு நிலைக்கு இட்டுச்செல்லும். ஆகவே அரசியல் களத்தில் நின்று மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுக்கு இடையில் பகமையுணர்வு தவிர்க்கப்பட்டு மறுபடியும் பரஸ்பரம் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான ஒரு சூழலை தோற்றுவிக்கும் நோக்குடனே இரு அமைப்புகளும் இந்த இணக்கத்திற்கு வந்திருக்கின்றன.

சகோதரப்பகமையும், சகோதர யுத்தமும் எங்கள் மக்களின் முகங்களில் சந்தோசங்களை தொலைத்து விட்டிருக்கின்றன. இந்நிலையில், மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, அரசியல் முரண்பாடுகள் இருப்பினும் அரசியல் செயற்பாட்டு தளத்தில் பகமை மறந்து நட்புறவுடன் கூடிய எண்ணங்களோடு அவரவரது கொள்கை வழி நின்று அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கி விரைவதற்கு இரு அமைப்புகளும் நம்புக்கையுடன் செயற்படுவதற்கு இணக்கம் கண்டுள்ளன.


நன்றி!
ஈழ மக்கள் ஐனநாயக கட்சி ஈ.பி.டி.பி!
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள், ரி.எம்.வி.பி! 10.07.2007

No comments: