* ஊழல் புகார் உச்சக்கட்டத்தில்
* மனித உரிமை மீறற் குற்றச்சாட்டு
* 2008 இல் இலங்கைக்கான அமெரிக்க உதவிகளில் பாரிய வெட்டு
* அரசியல் எதிர்ப்பும் ஒருங்கிணைகின்றது
கடந்த வாரத்து நிகழ்ச்சிகளை ஒன்றுதிரட்டி நோக்கினால் இந்த ஆட்சி பற்றிய மறுதலிக்க முடியாத சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.
ஊழல் பற்றிய புகார்கள் பாராளுமன்றத்தில் அப்பட்டமாகவே பேசப்பெற்றுள்ளன. ஊழல் நடவடிக்கைகளில் உயர் அதிகாரிகளே ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒழுங்குவிதிகளின் படி அவர்களையொன்றும் செய்யாத வகையில் ஊழல்கள் நிறைந்துள்ளன. ஊழல்கள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவையாகும். ஏனெனில், அரசாங்க நிர்வாக அமைப்பே முற்றிலும் சீர்குலைந்து கொண்டு செல்கின்றமையையே இது காட்டுகின்றது. மறுபுறத்தில் அரசியல் நிலைப்பட்ட எதிர்ப்பு வரவர பலமடைகின்றது.
யூ.என்.பி.- மங்கள இணைவு நிச்சயமாகியிருப்பது மாத்திரமல்லாமல் அண்மையில் இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெட்டத்தெளிவாகவே அரசாங்கத்தை சாடியுள்ளார். இதுவொரு சுவாரஸ்யமான நிலைமையாகும். இன்னும் சில வாரங்களுள் சுதந்திரக் கட்சி உண்மையில் யாருக்கு சொந்தமென்பது பெரிய பிரச்சினையாகப் போகின்றது.
பாதுகாப்புக்குப் பொறுப்பான செயலாளர் அண்மையில் நடந்தவொரு தொலைக்காட்சி நேர்காணலில் யுத்தம் மேற்கொண்டு செல்லப்படுமென்பதையும் அதற்கான திறமைகொண்ட "ஜாதிய நாங்கள்" என்றும் கூறியுள்ளார். இங்கு ஜாதிய எனும் பொழுது எதனைக் கருதினார்? அவருடைய நேர்காணல் யுத்தம் பற்றியே பேசிற்றாம். முப்படையினரதும் இணை நிலை பற்றிய குறிப்பும் வந்தது.
பொருளாதார நிலையில் விலைவாசிகள் இறங்குவதற்கான சாத்தியப்பாடே இல்லாதுள்ளது. இவை யாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா 2008 இலிருந்து இலங்கைக்கான தனது பொருளாதார, படைத் தேவைகளுக்கான நிதி உதவிகளை குறைத்திருப்பதாக `ஏசியன் றிபியூன்' செய்தி வெளியிட்டுள்ளது. அத்தகவலின் படி 2006 இல் வழங்கப்பெற்ற 14 கோடியே 5 இலட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு பதில் 2008 இல் 6 கோடியே ஒன்பதரை இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே வழங்கப்படலாமென அமெரிக்க செனற்றில் நிதியுதவிக் கண்காணிப்புக் குழு தீர்மானித்திருப்பதாக அத்தகவல் கூறுகின்றது.
இந்த விடயம் பற்றிய ஆய்வுக்குறிப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான விடயம் ராஜபக்ஷ அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கூற்றுகளைக் கூறுவது மாத்திரமல்லாமல் பாதுகாப்புச் சேவைகளை பொறுத்தவரையில் மனிதவுரிமை மீறல்களை அவை செய்கின்றன என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளை சாடுகின்ற அதேவேளை அரசாங்கத்தின் மனிதவுரிமைச் செயற்பாடுகள் பற்றிய கண்டனமும் தெரிவிக்கப்பெற்று அந்த அடிப்படையிலேயே இந்த நிதி வெட்டு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுக் குறிப்பு கூறுகின்றது.
அந்த ஆய்வுக் குறிப்பிலே கூறப்பட்டுள்ள முக்கியமான விடயம் என்னவெனில் ராஜபக்ஷ அரசாங்கம் தனது செயற்பாடுகள் பற்றி சர்வதேச சமூகத்துக்கு, அமெரிக்காவுக்கு எடுத்துக் கூறுவதற்கான ஒரு சிந்தனை நோக்கினை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதாகும். அமைச்சர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக கூறுவதும் அந்த முரண் நிலைகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை வெகுவாக குறைத்துள்ளன என்பதும் இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையென்றும் அது கூறுகின்றது.
இலங்கையில் அரசியல் யதார்த்த பின்புலத்தில் அமெரிக்க நிதிவெட்டையும் மற்றைய அரசியற் காரணிகளையும் ஆராய வேண்டியதொரு தேவையுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பணியை மேற்கொள்வதற்கான புத்திஜீவிகள் அனுசரணை இந்த அரசாங்கத்துக்கு நிச்சயமாக இல்லை. ஏனெனில், இன்றுள்ள நிலையில் இந்த அரசாங்கத்துக்கான கருத்து நிலை எடுகோள் எதுவுமில்லை. மகிந்த சிந்தனை பற்றிப் பேசுவது வெகுவாக குறைந்துவிட்டது. யூ.என்.பி. மேலுக்கு வருவதை விரும்பாத ஜே.வி.பி. தனது மாணவர் அணி, தொழிற்சங்க அணிகளை எவ்வித ஒளிவுமறைவுமின்றி அரசாங்கத்துக்கு எதிராக பயன்படுத்த தொடங்கியுள்ளது. சென்றவாரம் நடந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி இதற்கு நல்ல உதாரணமாகும். இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்கு இன்னும் ஏறத்தாழ 4 வருடங்கள் உள்ளதெனினும் அதற்கான திட்டமிடல் திருஷ்டி எதுவுமிருப்பதாக தெரியவில்லை.
இந்த பின்புலத்திலே தான் யூ.என்.பி. பாராளுமன்ற நிலையில் கிளப்பும் விவாத உஷ்ணம் கருத்துள்ளதாகின்றது. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமுடையவராக இருந்தாலும் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டதொரு அமைச்சரவை மூலமாகவே ஆட்சி நடைபெறவேண்டும் என்பது விதியாகும். யூ.என்.பி.யின் முழு முயற்சியும் இப்பொழுது அந்தப் பாராளுமன்ற தளத்தை சீர்குலைய வைப்பதுதான்.
கடந்த இரண்டு வாரகால நிகழ்ச்சிகளை பார்க்கின்றபொழுது ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்மார் இந்த எதிர்ப்புகள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.
மேற்கூறிய விடயங்கள் எவற்றையும் தனித்தனியாகவும் ஒருமித்தும் பார்க்க வேண்டிய அவசியம் அரசியல் மாணவர்களுக்கு அத்தியாவசியமானது. இங்கிருந்து எங்கே என்ற ஒரு பெரும் வினாவினை ஆங்கில பாரம்பரியத்தில் லத்தீன் மொழியில் கேட்பார்கள். கிதணி.திச்ஞீடிண் என்பது பிரசித்தமான லத்தீன் சொற்றொடர் ராஜபக்ஷ பற்றியும் இந்த வினாவினை எழுப்பலாம். அதற்கான காலம் கனிந்துவிட்டது.
2007 இலேயே இத்தனை கஷ்டங்களை எதிர்கொள்ளும் இந்த அரசாங்கம் 2008 இல் இந்த நிதி வெட்டுகளுடன் எவ்வாறு தன்னைத்தானே சமாளித்துக்கொள்ளப் போகின்றது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகும். அந்த இலக்கை நோக்கியே ரணிலின் படையணி முன்னேறுகின்றது என்று கூடச் சொல்லலாம்.
இதனை தமிழர் நிலைப்பட நின்று நோக்கும் பொழுது இதனை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி ஆழமாக சிந்தித்தல் அவசியமாகும். தமிழர்களுக்கு நியாயபூர்வமான குறைபாடுகள் உள்ளன என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்கின்றனர். அந்த நியாயபூர்வமான கோரிக்கைகள் பற்றி எதுவும் செய்யாமல் பாதுகாப்புப் படையினரால் மனிதவுரிமை மீறல்கள் நடைபெறுகின்றன என்பதும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. ஆனால், பயங்கரவாதம் என்ற சொல்லையும் அவர்கள் பயன்படுத்தத் தவறவில்லை. அதற்குள்ளே அரசியல் தாற்பரியம் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. இலங்கையினுள் தமிழருக்குள்ள இன்னல்கள் குறித்து விரிவான எடுத்துரைப்புகள் சர்வதேச மட்டத்திலே செய்யப்பட வேண்டும். அதற்கானதொரு சிந்தனை முகாம் அவசியம். இது பற்றிய ஆழமான சிந்தனையும் அவசியமாகும்.
நன்றி: தினக்குரல்
Sunday, August 26, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment