கௌரவ சபாநாயகர் அவர்களே!.......அழகிய எங்கள் தேசம் பாரிய அழிவை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றது.
நடந்து கொண்டிருக்கும் இழப்புகளையும் விட இன்னமும் அதிகமான ஒரு அழிவு நோக்கி எமது மக்களை இழுத்து செல்வதற்கு புலித் தலைமை தயாராகிக்கொண்டிருக்கின்றது.
நடந்து கொண்டிருக்கும் அழிவுகளில் இருந்தும். இனி நடக்கப்போகும் அழிவுகளில் இருந்தும் எமது மக்களையும் எமது தேசத்தையும் காப்பதற்கு ஒரு அபாயத்தின் முன்னறிவிப்பாக நான் மனம் திறந்து பேச விரும்புகின்றேன்.
இன்று எமது மக்களின் முகங்களில் மகிழ்ச்சி இல்லை!... அவர்களது மனங்களில் நிம்மதி இல்லை.... நாளைய பொழுது நல்லதாக விடியும் என்ற நம்பிக்கைகளே அவர்களது எதிர்பார்ப்பு!.... அதுதான் அவர்களது விருப்பம்.....
ஆனாலும், அந்த நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் வெறும் கனவாகிப்போய்விடுமோ என்ற ஏக்கத்தில் மட்டும்தான் எமது மக்களின் ஒவ்வொரு பொழுதுகளும் விடிந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு காரணமாக இருப்பது முடிவற்று தொடரும் அழிவு யுத்தம் மட்டும்தான்.
அன்று தமிழ் பேசும் மக்களுக்கான ஆயுதப்போராட்டம் என்பது நீதியின் பக்கம் நின்று வழி நடத்தி செல்லப்பட வேண்டும் என்ற ஒரு வரலாற்று நிர்ப்பந்தம் இருந்தது. அப்போது நாமும் நீதியின் பக்கம் நின்று ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி சென்றவர்கள்.
ஆனாலும் அந்த ஆயுதப்போராட்டம் திசை வழி மாறிச்சென்றது. ஆயுதப்போராட்டம் என்பது செல்ல வேண்டிய பாதையை விட்டு தடம்புரண்டு தவறான பாதைக்கு சென்றது.
எந்த மக்களுக்காக போராடுவதாக புலித் தலைமையினர் கூறினார்களோ அதே சொந்த மக்களையும் அவர்களுக்காக போராடப்புறப்பட்ட போராளிகளையும் கொன்று குவிக்கும் கோடரிக்காம்புகளாக புலித் தலைமை செயற்படத்தொடங்கியது.
புலித்தலைமையின் ஏவலால் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மீது படுகொலைகளை புரியத் தொடங்கினார்கள் புலிகள். அப்பாவி சிங்கள சகோதர மக்களை தெருவெங்கும் கொன்று போட்டனர் புலிகள்.
ஆயுதப்போராட்டம் என்பது எதை அடையவேண்டும் என்ற ஒரு இலக்கையே கொண்டிருக்க வேண்டும். ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவோ அன்றி ஒரு இலக்கை அடைவதற்காகவோ நடக்கின்ற எந்தப்போராட்டத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
சொந்த இனத்தின் குருதியை குடிக்கவும், காலங்காலமாக ஒன்றாக வாழ்ந்திருந்த முஸ்லிம் சகோதர மக்கள் மீது வன்முறைகளை ஏவிவிடவும், அப்பாவி சிங்கள மக்களை கொன்று குவிக்கவுமே ஆயுதப்போராட்டம் புலித்தலைமையால் பயன்படுத்தப்பட்டது.
இழப்புக்களை மட்டும்தான் ஆயுதப்போராட்டம் ஏற்படுத்தியிருந்தது. இழப்புக்கள் இல்லாமல் போராட்டம் இருக்க முடியாது என்று கூறும் புலித்தலைமை இதுவரை கால இழப்புகளில் இருந்து எந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
இழப்புக்கள் இல்லாமல் போராட்டம் இல்லை என்று கூறும் புலித்தலைமையை நியாயப்படுத்தும் சுயலாபக்கார பேர்வழிகள்தான் மக்களின் இழப்புகள் குறித்து பேச இங்கு வந்திருக்கின்றார்கள்.
கொல்!.... அல்லது கொல்லப்படு!!... என்ற மக்கள் விரோத கோட்பாட்டை கொண்டிருக்கும் புலித்தலைமையை நியாபடுத்தும் சுயலாபக்கார பேர்வழிகள்தான் கொலைகளைப்பற்றி பேச இங்கு வந்திருக்கிறார்கள்.
நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை யாழ்ப்பாணம் அனுப்பவதற்கு தயாராக இருங்கள் என்று பாராளுமன்றத்தில் யுத்த பிரகடனம் செய்து விட்டு, அதனால் விளைந்த அழிவுகளை பற்றி அவர்களே இன்று பேச வந்திருக்கிறார்கள்.விசித்திரமான பேர்வழிகள் இவர்கள். வேடிக்கையான மனிதர்கள் இவர்கள், மக்களின் வேதனைகளுக்கு தாமே காரணமாக இருந்து கொண்டு அவர்களே வேதைனைகள் குறித்தும் மக்கள் சந்தித்து வரும் சோதனைகள் குறித்தும் பேச வந்திருக்கிறார்கள்.
அழிவுகளில் இருந்து மக்களையும் எமது தேசத்தையும் மீட்டெடுத்து அமைதிப்பூங்காவில் உரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக தமிழ் பேசும் மக்கள் வாழவேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கில் மட்டும்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது உருவாக்கப்பட்டது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னரான ஆயுதப்போராட்டமும் அதற்கு முந்திய அகிம்சை வழிப்போராட்டங்களும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பினை உருவாக்கி தந்திருந்தது.இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு இன்று இருபது ஆண்டுகள் கழிந்து விட்டன. அந்த பொன்னான வாய்ப்பினை புலித்தலைமை உடைத்து சிதைத்திருந்தது.
அதே வேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கூட அதை சரிவரப் பயன்படுத்தவும் தவறி விட்டனர். அந்த ஒப்பந்தத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்திருந்தனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சரியாக பயன்படுத்த எண்ணிய ஈ.பி.டி.பி யினராகிய எமக்கு அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அன்று அதை ஏற்றுச்செயற்பட்டிருந்த அமைப்பினர் மறுத்திருந்தனர் என்பதையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
ஏகபிரதிநித்துவம் என்ற புலித் தலைமையின் தலைமை வெறி ஒருபக்கமும், அதே குணாம்சத்தில் பிற தலைமைகளை அங்கீகரிக்க தவறிய தவறான தலமைகள் இன்னொரு பக்கமுமாக நின்று இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைகளை குழி தோண்டி புதைத்திருந்தன.
அது ஒரு பொன்னான வாய்ப்பு! இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உடைத்து சிதைத்து புலிகள் ஏற்படுத்திய நாசகாரச்செயல்களும், அதை சரிவர பயன்படுத்த தவறிய கட்டுப்பாடற்ற தலைமைகளின் தவறான செயற்பாடுகளும் இன்று எமது மக்களாகிய உங்களது கண்களில் இருந்து இரத்த கண்ணீரை வரவழைத்திருக்கின்றன.
இந்த இருபது ஆண்டுகளும் இழப்புக்களோடும் இன்னல்களோடும் மக்களாகிய உங்களது துயரக்கதை தொடர்கின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகும் வரைக்கும் புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்கள் தொகை 652 உறுப்பினர்கள் மட்டும்தான். இதை புலித் தலைமையே அப்போது பகிரங்கமாக அறிவித்திருந்தது.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உடைத்து சிதைத்து நாசமாக்கி அமைதிப்படையோடு அழிவு யுத்தம் தொடங்கிய புலித் தலைமை அதன் பின்னர் இலங்கை அரச படைகளோடும் அழிவு யுத்தத்தை தொடர்ந்திருந்தனர். இப்போது தமது புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்கள் தொகை பத்தொன்பதினாயிரத்தை கடந்து விட்டதாக புலித் தலைமை அறிவித்திருக்கின்றது.
அதைவிடவும், புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உள்ளியக்கப்படுகொலைகளினால் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் தொகைகள் எத்தனை?... தம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிழக்கின்; வெருகல் ஆற்றுப்படுகொலையில் கொல்லப்பட்ட உறுப்பினர்களின் தொகைகள் எத்தனை?.... கொழும்பில் நஞ்சூட்டிக்கொல்லப்பட்ட உறுப்பினர்களின் தொகைகள் எத்தனை?... இவைகள் புலிகளின் 19000 என்ற கணக்கில் சேர்க்கப்படவில்லை.
தமிழர்களின் மாற்று அமைப்புக்களின் உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், புலிகளின் தவறான பாதைக்கு ஒத்துப்போக மறுத்த பொதுமக்கள், கப்பமும், கட்டாய வரியும் கொடுக்க மறுத்தவர்கள் என பல தரப்பட்டவர்களும் புலித் தலைமையின் குருட்டுத் துப்பாக்கிகளுக்கு பலியாகிப்போயிருக்கின்றார்கள்.
யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட பொதுமக்களின் அழிவுகள் உட்பட கணக்கு பார்த்தால் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய அழிவுகளே பலமடங்கு அதிகமாக இருக்கின்றது.
புலிகளால் நேரடியாக கொல்லப்பட்டாலும் சரி, அல்லது யுத்தத்தில் கொல்லப்பட்டாலும் சரி இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான இன்று வரையான அழிவுகளுக்கான பொறுப்பை புலித் தலைமையே ஏற்கவேண்டும்.
ஏனெனில் அந்த ஓப்பந்தத்தை எதிர்த்து அமைதிப்படையோடு யுத்தம் நடத்தி, அதன் பின்னர் பிறேமதாச அரசுடனும் பேசி, கூடிக்குலாவி பின்னர் யுத்தம் நடத்த தொடங்கி, அதை இன்று வரை தொடர்ந்து எமது மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் புலித் தலைமையே.
இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு 13 வருடங்கள் கழிந்த நிலையில் அதாவது 2000 ஆம் ஆண்டு புலித்தலமையின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பகிரங்கமாக மக்களுக்கு என்று கூறி ஆற்றியை உரையின் கருத்துக்களையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் நல்ல பல சாதகமான அம்சங்கள் இருந்தன என்ற உண்மையை அன்னரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிட்டு பேசியிருந்தார். சாத்தான் வேதம் ஓதியது போல், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உடைத்து சிதைத்திருந்த புலிகளின் ஆலோசகரே பின்பு அதை ஆதரித்தும் கருத்து கூறியிருந்தார். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் தேவையில்லை!
இன்னொரு புறத்தில், இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றும் ஆக்கிரமிப்பு என்றும், எமது நேச நாடாகிய இந்தியாவுடன் பகமையை தோற்றுவிப்பதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட முனைந்தவர்கள்தான் இன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்து அறிக்கைகளில் மட்டும் அழுது வடிக்கின்றார்கள்.
ஒரு பொறுப்புள்ள அரசியல் கடமையோடு அன்றைய சமகாலத்தை உணர்ந்து, எதிர்காலத்தின் விளைவுகளையும் உணர்ந்து, அரசியல் ஜதார்த்த நிலமைகளை கருத்தில் கொண்டு இது போன்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரங்களை நான் கருத்துக்களால் மட்டும் தடுத்து நிறுத்தியும் இருக்கின்றேன் என்ற விடயத்தையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை தவற விட்டவர்கள் கடந்து போன பஸ்வண்டிக்கு கை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்த தவறிய தமிழ் தலைமைகளால் இன்று எமது மக்கள் யுத்தம் என்ற இருட்டறைக்குள் சிறைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இலங்கை இந்திய ஒப்பந்தம், அதற்கு பிந்திய ராஜீவ் காந்தியுடனான புலித் தலைமையின் இரகசியப்பேச்சு வார்த்தை, பிறேமதாசா - புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா குமாரணதுங்க - புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் விக்கரமசிங்க - புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என அனைத்து சந்தர்ப்பங்களையும் தங்களது சுயலாப வன்முறை அரசிலுக்கு மட்டும்தான் புலித்தலமை பயன்படுத்திக்கொண்டது.
கௌரவ ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்த போது தான் பிரபாகரனுடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடப்போவதாக தனது சமாதானத்தின் மீதான விருப்பத்தை பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். ஆனாலும் அந்த சமாதான விருப்பங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த புலித் தலைமை பொங்கி எழும் மக்கள் படை என்றும், சீறும் படை என்றும், சங்கிலியன் படை என்றும் பல அனாமதேய அமைப்புகளின் பெயரால் அரச படையினர் மீதான தாக்குதல்களை நடத்த தொடங்கியிருந்தனர்.
பல நூறு மாற்று கருத்து கொண்ட தமிழ் ஐனநாயக சக்திகள் மீதும், ஒத்துப்போக மறுத்த தமிழ் பொதுமக்கள் மீதும் இதே அனாமதேய அமைப்புகளின் பெயரால் படுகொலைகளையும் புரிந்திருந்தனர் புலித்தலைமை.
2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கௌரவ ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தார். பதவிக்கு வந்ததும் தனது சமாதானத்திற்கான நல்லெண்ண சமிக்ஞையை காட்டியிருந்தார் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாக பேச விரும்புவதாகவும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
அதற்கு அடுத்த வாரம் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்த நவம்பர் மாத உரையை நிகழ்த்தியிருந்தார். பிரபாகரன் தனது உரையில் தனது வழமையான யுத்த பிரகடனத்தையே வெளிப்படுத்தியிருந்தார். தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்ற தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தனது உரையில் தெரிவித்திருந்த பிரபாகரன் தனது இலக்கை எட்டுவதற்கான யுத்த எண்ணங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே தாம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த ஆபத்தான சூழலை கருத்தில் கொண்டு ஈ.பி.டி.பி யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களையும் இந்த நாட்டில் இருக்கும் அனைத்து இன மக்களையும் அழிவுகளில் இருந்து காப்பாற்றுமாறு கோரி சர்வதேச சமூகத்திடம் ஒரு மனிதாபிமான வேண்டு கோளை 06. 12. 2005 இல் விடுத்திருந்தோம்.
அந்த அறிக்கையின் சில பகுதிகளை இந்த சபையில் நான் எடுத்து கூற விரும்புகின்றேன்.
வடக்கு கிழக்கில் படையினரை தூண்டிவிடும் வகையில் புலிகளால் பரந்த அளவிலான இராணுவ முன்னெடுப்பும் தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன!
இதுவரை கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதன் முதலாக படையினர் மீது யாழ் கோண்டாவில் பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு ஆறு படையினர் கொல்லப்பட்டு இருவர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காயமடைந்த ஒருவரும் காலமானார்.
அதேபோல் முதன் முதலாக யாழ் நீர் வேலிப்பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் இதுவரை நடத்திருக்காத பரந்த அளவில் நேரடி தாக்குதலிலும் புலிகள் ஈடுபட்டு இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2005 டிசம்பர் மாதம் 6ம் திகதி புலிகளால் இருபாலையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.
அதே வேளை கிழக்கில் காத்தான்குடி பிரதேச செயலாளர் ஏ.எல். எம். பளீல் அவர்களை படுகொலை செய்ததன் மூலம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான மோதலையும் முரண்பாடுகளையும் புலிகள் தூண்டிவிட்டிருக்கின்றார்கள்! அதேபோல் 2005 நவம்பர் 18ம் திகதி அதிகாலை அக்கரைப்பற்று முஸ்ஸிம் பள்ளிவாசலினுள் புலிகள் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டு 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயம் அடைந்தனர். 2005 நவம்பர் 19ம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2005 டிசம்பர் 06ம் திகதி புலிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மருதமுனை பகுதி வாசிகளான இரு முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
மாணவர்களின் பெயரால் மாணவர்களின் சீருடைகளை அணிந்த புலிகளின் சிறுவர் படையணியினர் படையினரின் சோதனைச்சாவடிகளுக்கு கல் எறிந்து தாக்குவதால் மாணவர்களின் கல்வி மற்றும் இயல்பு வாழ்க்கை என்பனவும் இன்னமும் பல் மடங்கு பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.
மக்களின் குடியிருப்புக்களில் இருந்து புலிகள் தாக்குதல் நடத்துவதால் அப்பாவி மக்களே பாதிப்படைகின்றார்கள். அப்பாவி மக்களுக்கு அவலங்கள் நிகழ வேண்டும் என நினைத்து புலித் தலைமை திட்டமிட்டு நடத்தும் தாக்குதல்கள் இவையாகும்.
புலித் தலைமை முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளால் சமாதானத்தை விரும்பும் மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இதேவேளை யுத்த எண்ணங்களை தூண்டிவிடும் வகையிலான பிரச்சாரங்களை புலிகளின் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் இறுதி யுத்தத்திற்கான நிதி சேகரிப்பு என்று பாரிய அளவில் உளவியல் அச்சுறுத்தலை விடுத்து பலாத்காரமாக நிதி சேகரிக்கும் காரியத்திலும் புலிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேவேளை கோண்டாவில் பகுதியில் புலிகள் நடாத்திய கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை வீடியோ படம் பிடித்து வெளிநாடுகளில் காட்டியும் நிதிதிரட்டியும் வருகின்றனர்.
ஆகவே இது குறித்து சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து விரைந்து பணியாற்ற வேண்டும்! யுத்தத்தை தொடராதிருக்கவும், சமாதானப்பேச்சுக்களை ஆரம்பிக்கவும் ஆவன செய்து அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்!
தமிழ் பேசும் மக்களின் சமாதானம் குறித்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் சர்வதேச சமூகத்தின் கைகளில் நாம் ஒப்படைக்கின்றோம்! சமாதானத்தை உருவாக்கவும் தமிழ் பேசும் மக்களை காப்பாற்றவும் விரைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என ஈ.பி.டி.பி கோரிக்கை விடுக்கின்றது. இவ்வாறு ஈ.பி.டி.பி யினராகிய நாம் சர்வதேச சமூகத்திடம் 06. 12. 2005 இல் மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தோம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே!...
அன்று புலிகள் யுத்த முனைப்புகளில் ஆர்வம் காட்டி படையினர் மீதான தாக்குதலை ஆரம்பித்திருந்த போது வரப்போகும் அழிவுகளை கருத்தில் எடுக்காமல் புலிகளின் தயவில் இருக்கும் சுயலாபகார பேர்வழிகள் வாய் பொத்தி மௌனிகளாக இருந்திருந்தனர். ஆனால் இன்று அதே சுயலாபகார பேர்வழிகள் அவர்கள் தமிழ் பேசும் மக்களின் அழிவுகள் குறித்து நாடாளுமன்னத்தில் விவாதம் நடத்த வந்திருக்கின்றார்கள்.
புலிகளும் அவர்களது தயவில் கூட்டமைப்பு என்ற பெயரில் இருக்கும் பொறுப்பற்ற சுயலாபக்கார அரசியல் பேர்வழிகளும் நேற்றைய தவறுகளால் இன்று அழுவது போல் நடிக்கின்றார்கள், இன்றைய தவறுகளால் நாளையும் அழுவது போல் நடிப்பார்கள். ஆனால் நடந்த தவறுகளுக்கு யார் காரணம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டும் தெரியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.
இன்று இருக்கின்ற சந்தர்ப்பங்கள் கூட சரிவரப்பயன்படுத்தபடுவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. சாமாதானமும், அமைதியும், அரசியலுரிமை சுதந்திரமும் மக்களாகிய உங்களது கைகளுக்கு எட்டாத தூரத்திற்கு தள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் மட்டும்தான் கிட்ட வந்து எமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனதும் வாசல் கதவுகளை கோர முகத்துடன் தட்டிக் கொண்டு இருக்கின்றது.
தமது யுத்த வெறியினால் சமாதானத்திற்கான சந்தர்ப்பங்களை உதறித் தள்ளிவிட்ட புலித் தலைமை எமது தாயக பூமியான கிழக்கு மண்ணை இழந்து நிற்கிறது. இருந்ததையும் இழந்து நிற்கும் புலித்தலமை இருப்பதையும் இழப்பதற்கான வழமையான கைங்கரியத்தில் இப்போது இறங்கி நிற்கிறது.
வன்னி பெருநிலப்பரப்பை தமது அதிகாரப்பிடிக்குள் வைத்திருக்கும் புலித்தலைமை அங்குள்ள இளம் சிறார்களை பலாத்காரமாக தமது படையணிக்கு சேர்த்து வருகின்றார்கள். பெற்றார் முன்னிலையில் பிள்ளைகள் ஆயுதப்பயிற்சிக்காக கதறக்கதற கடத்திச்செல்லப்படுகின்றார்கள்.
வெள்ளை வான்களில் வீடுகள் தோறும் வந்திறங்கும் புலிகள் வன்னி வாழும் மக்களின் பிள்ளைகளை அவர்களது விருப்பங்களுக்கு மாறாக பிடித்துச்செல்கின்றார்கள்.
இவ்வாறு பிடித்துச்செல்லப்படும் எமது தமிழ் இளவயதினர்கள் கட்டாய ஆயுதப்பயிற்சியில் ஈடு படுத்தப்படுகின்றார்கள். அநியாயமாக குருதி சிந்தும் கள முனைக்கு அனுப்பப்படுகின்றார்கள்.
யுத்த முனைக்கு செல்ல விரும்பாத எம் தமிழ் இளையோர்களை துப்பாக்கி குழாய்களை அவர்களது முதுகுகளுக்கு பின்னால் நீட்டியபடி இராணுவ காவலரன்களை நோக்கி நிற்கும்படி மிரட்டுகின்றார்கள்.
குறிப்பட்ட தமது பிரதேசங்களுக்குள் மட்டும் நடமாட வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்து அதெற்கென விஷேட அடையாள அடடையினையும் புலிகள் தங்களது கட்டுப்பாட்டு பிரதேசமான வன்னியில் அதிகாரம் செலுத்தி மக்களை அடக்கியும் வருகின்றார்கள். சுதந்தரமாக நடமாட முடியாது, சுதந்திரமாக தொழில் புரிய முடியாது, சுதந்தரமாக எழுத முடியாது, பேச முடியாது, விரும்பியபடி பொது மக்கள் வன்னியை விட்டு வெளியேறிச்செல்ல முடியாது.
சிறார்கள் முதற்கொண்டு முதியோர்கள் வரை கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் கட்டாய ஆயுதப்பயிற்சியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கின்றார்கள். இது குறித்து புலிகளின் தயவில் தமிழரின் பெயரால் வாக்கு மோசடியில் ஈடுபட்டு திருட்டத்தனமாக நாடாளுமன்றம் வந்திருப்பவர்கள் வாயே திறப்பதில்லை.
கடந்த 11. 08. 2006 அன்று யாழ் மண்ணை நான்கு நாட்களில் கைப்பற்றப்போவதாக கூறி புலிகள் நடத்திய யாழ் மீதான தாக்குதல் முயற்சி பெரும் இழப்புகளோடு தோல்வியில் முடிந்திருந்ததை அனைவரும் அறிவீர்கள். இதனால் யாருக்கு இழப்பு?... யாருக்கு அவலம்?... இதை புலிகளின் தயவில் அரசியல் நடத்தும் பேர்வழிகள் புரிந்து கொண்டும் மக்களின் அவலங்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடித்து வந்து நிற்கிறார்கள்.
மக்களின் அவலங்கள் குறித்தும், அழிவுகள் குறித்தும் நீலிக்கண்ணீர் வடிக்கும் பேர்வழிகள் அந்த அவலங்களுக்கு புலிகள்தான் பிரதான காரணமாக இருக்கின்றார்கள் என்ற உண்மைய எடுத்து கூற வக்கற்றவர்களாக இருக்கின்றார்கள்.
நேற்றைய தினம் இவர்களில் சிலர்கூட இந்த சபையில் மக்களின் அவலங்கள் குறித்து பேசியிருந்தார்கள். "இடிப்பது சிவன் கோயில், படிப்பது தேவாரம்" என்பது போல் அவலங்களுக்கு தாமும் காரணமாக இருந்து கொண்டு அவலங்களுக்காக அழுவது போல் நடித்திருந்தார்கள்.
யார் இவர்கள்?..... மக்களின் சொத்துக்களை மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் இருந்து கொண்டு சூறையாடிக்கொண்டிருக்கும் ஊழல் பேர்வழிகள் இவர்கள், மக்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தையும், தொழிலாளர்களின் உழைப்பையும் திருட்டுத்தனமாக சுரண்டும் சுரண்டல் பேர்வழிகள் இவர்கள். திருகுதாளமிட்டு திருட்டு வாக்குப்போட்டு மக்களின் வாக்குரிமையை தட்டிப்பறித்து தமக்கு தாமே வாக்குப்போட்டு நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பவர்கள் இவர்கள். வேறுசிலர் யுத்த நெருக்கடி நிலைமைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு. கொள்ளை லாபம் அடிப்பதில் ஈடுபடுகின்றனர்.
மக்களின் அவலங்கள் குறித்து பேசும் தகுதியை இழந்திருப்பவர்கள் இவர்கள் என்று மக்களே எம்மிடம் வந்து முறையிட்டிருக்கின்றார்கள். புலித் தலைமையின் யுத்த வெறிக்கு தமது சுயலாபத்திற்காக தாளம் போடும் தலையாட்டி பொம்மைகள் இவர்கள்.
யாழ் குடாநாட்டை கைப்பற்ற நினைத்து புலித் தலைமை மேற்கொண்ட யுத்த வெறியினால் முகமாலையிலும் அல்லைப்பிட்டியிலும் எமது தமிழ் இளவயதினரை யுத்தத்திற்கு பலி கொடுத்து விட்டு திரும்பி ஓடியதுதான் கண்ட மிச்சம்.
இப்போது யாழ் மீது படையெடுக்க புலித்தலைமை மறுபடியும் திட்டமிட்டு வருகின்றது. அதற்காக அறுபதினாயிரம் தமிழ் இளவயதினரை கட்டாயத்தின் பேரில் பிடித்துச்சென்று அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் அளித்து வருகின்றது புலித் தலைமை.
யாழ் மண்ணையும் தங்களது சர்வாதிகார ஆதிக்க பிடிக்குள் கொண்டு வர நினைக்கும் புலித் தலைமை யாழ் மண்ணிலும் தங்களது சட்ட விரோத சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது, யாழ் மண்ணில் இன்னும் ஐம்பதினாயிரம் இள வயதினரை கட்டாயத்தின் பேரில் தங்களது படையணியில் சேர்க்கும் திட்டத்தை புலித் தலைமை தீட்டி வருகின்றது.
மண் மீட்பு என்ற சுயலாப கற்பனைத்தேரில் பவனி வரும் புலித் தலைமை தாம் மீட்கப்போவதாக கூறும் மண்ணுக்காக அப்பாவி மக்களை பலி கொடுக்க தயாராகி வருகின்றது. யாழ் மண்ணை கைப்பற்ற நினைக்கும் புலித்தலைமை இளவயதினரையும், அப்பாவி மக்களின் உயிர்களையும் பலி கொடுக்க தயாராகி வருகின்றது.
ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற வகையில், சாண் ஏற முழம் சறுக்குவது என்ற நிலையில் நிலங்களை கைப்பற்றுவதும், பின் அதை கைவிட்டு ஓடுவதுமாக புலித் தலைமையின் வரலாறு தொடந்தபடி இருக்கின்றது.
இந்நிலையானது தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு என்ற இலக்கு நோக்கிய பயணத்தை பின்னோக்கி இழுத்து வருகின்றது. மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி என்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை அடைவதற்கான பாதையில் தடைகளை உருவாக்கி வருகின்றது.
இன்றைய காலச்சூழலில் யுத்தத்தால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டு விட முடியாது. யுத்தம் அழிவுகளை மட்டும்தான் உருவாக்கும். யுத்தம் இளவயதிரை பலாத்காரமாக தங்களது படையணிகளுக்கு கடத்திச்செல்லவே வழி வகுக்கும். அப்பாவி மக்களை சுயலாப அரசியலுக்கு பலி கொடுக்கவே பயன்படும்.
பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டு விடும் என்ற முதுமொழியைப்போல் யுத்தத்தின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்ற புலித் தலைமையின் அழிவு நோக்கிய திட்டங்கள் இருக்கின்ற நிலமைகளையும் மோசமான ஒரு நிலைக்கே இழுத்துச்செல்லும். எமது மக்களுக்கும், இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் அழிவுகள் வந்து விடக்கூடாது என்ற விருப்பத்தில் இருந்துதான் நான் இதை தெரிவிக்க விரும்புகிறேன்.
புலித் தலைமையின் யுத்தவெறி ஒரு போதும் நிரந்தர வெற்றியை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. அப்பாவி மனித உயிர்களை யுத்தத்திற்கு தின்ன கொடுத்து அவர்கள் முன்னெடுகப்போகும் நாசகார நடவடிக்கை என்பது இன்னும் இலட்சக் கணக்கான மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தப் போகின்றது. மனிதப்பிணங்களை தெருக்கள் எங்கும் வீசியெறியப் போகின்றது.
மண்ணை கைப்பற்றுவதும், அதன் பின்னர் கைப்பறிய மண்ணை கைவிட்டு தப்பி ஓடுவதுமாகவே புலித் தலைமையின் இது வரை கால நாசகார வரலாறுகள் தொடர்ந்து வந்திருக்கின்றது. புலித் தலைமை மண்ணை கைப்பற்றும் போதும் மக்களுக்கு இழப்பு வருகின்றது. அதன் பின்னர் மண்ணை கைவிட்டு ஓடும் பொழுதும் மக்களுக்கு மட்டும்தான் இழப்பு வருகின்றது.
பல்குழல் பீரங்கிகள் மோதிக்கொள்வதால் ஏற்படப்போகும் அழிவுகளை பல் குரல்களாலும் தடுத்து நிறுத்த முடியும். யுத்தத்திற்கு எதிராக அனைத்து சமாதான விரும்பிகளும், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல அனைத்து இன மக்களும் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டிய தருணம் இது!
புலிகளின் யுத்த வெறி மீது தாம் கொண்டிருக்கும் வெறுப்பை மௌனத்தில் புதைத்து வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்கள் இருப்பார்களேயானால் வரப்போகும் அழிவுகளை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். யுத்தத்தை தடுத்து நிறுத்தவும், யுத்தம் தரப்போகும் அழிவுகளில் இருந்து மக்களையும் இந்த நாட்டையும் காப்பாற்றிக்கொள்ளவும் அனைத்து சமாதான விரும்பிகளும் முன்வர வேண்டும்.
இது தமிழ் பேசும் மக்களின் பெயரால் நடத்தப்படுகின்ற யுத்தம். தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக என்று கூறி தங்களது பிள்ளைகளை பதுக்கி பாதுகாத்து வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் பிள்ளைகளை மட்டும் பலிக் களத்திற்கு தின்னக்கொடுக்கும் புலி யுத்தம்.
ஆகவே யுத்தம் வேண்டாம் என்று வெளிப்படையாக வாய்திறந்து பேசுவதற்கு தமிழ் பேசும் மக்களுக்கு உரிமை உண்டு! இந்த அழிவு யுத்தத்தை யாரும் அங்கீகரிக்க முடியாது. இது நீதியான யுத்தமல்ல. அநீதியான யுத்தம். இந்த யுத்தத்தின் மூலம் புலித் தலைமையால் எதையும் சாதித்து விட முடியாது.
தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலுரிமை சுதந்திரம் வேண்டும். அமைதி வேண்டும், சமாதானம் வேண்டும். ஆனால் இவைகளை இந்த யுத்தத்தின் மூலம் அடைய முடியாது என்ற உண்மையை அனைவரும் வெளிப்படையாக தெரிவிக்க முன்வரவேண்டும்.
புலித் தலைமை முன்னெடுக்கும் நாசகாரச்செயல்களில் இருந்து தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்கள் விலகியிருக்க வேண்டும். புலித் தலைமையின் வன்முறை நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.
இரத்தம் சிந்தாமல், யுத்தம் நடத்தாமல் எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்கள் இருக்கின்றன. அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன. யாராலும் வெல்லப்பட முடியாத நம்பிக்கையும் துணிச்சலும் எங்களிடம் இருக்கின்றன. நடை முறைச்சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வை எட்டிவிட வேண்டும்.
இன்று அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் யாவும் சுயலாப அரசியல் என்ற சாக்கடை சகதிக்குள் புதைந்து போயிருக்கின்றன. அந்த சகதிக்குள் இருந்து அரசியல் தீர்வு நோக்கிய வண்டியை இழுத்து செல்ல வேண்டும்.
அதை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து ஈ.பி.டி.பி யினராகிய நாம் சர்வகட்சி மாநாட்டிலும், அனைத்து கட்சி தலைவர்களின் சந்திப்புகளிலும், ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடமும், எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவிடமும், சர்வ தேச நாடுகளிடமும் தெளிவாக எடுத்து கூறியிருக்கின்றோம்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் இன்னமும் தென்னிலங்கையில் அரசியல் தலமைகளினால் வழி நடத்திச்செல்லப்பட்டு வருகின்றன. இன்னமும் நடை முறையில் இருந்து வருகின்றன.
ஆனால் வடக்கு கிழக்கில் மட்டும் அதற்கான அரசியல் தலமை கொடுக்கப்படாமல் செயலிழந்து போயிருக்கின்றது. பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளாலும் தமிழ் பேசும் மக்களின் பெயரால் வன்முறை நடத்தும் யுத்த வெறியர்களாலும் வடக்கு கிழக்கு மாகாண சபை என்பது செயலிழக்கப்பட்டு விட்டது.
மாகாண சபை திட்டம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்காகவே உருவாக்கபட்ட ஒன்று. ஆனால் அந்த வாய்ப்பினை தமிழ் பேசும் மக்கள் மட்டும் அனுபவிக்க முடியாமல் இருக்கின்றார்கள்.
ஆகவே வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான ஒரு அரசியல் தலமைத்துவத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் சகதிக்குள் புதைந்திருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை முன்னோக்கி நகர்த்த முடியும்! அடுத்த கட்டத்தை நோக்கி அரசியல் தீர்வு முயற்சிகளை நகர்த்திச்செல்ல முடியும். மக்களின் அன்றாட அவலங்களுக்கு முதலில் தீர்வு காண முடியும்
இரண்டாவது கட்டமாக, இன்று நடை முறையில் இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் கூடிய அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு கொடுத்து மாகாண சபை அதிகாரத்தை பலப்படுத்துவது. அதாவது இணைப்பு பட்டியலை மாகாணசபையுடன் சேர்த்து விடுவது.
இந்த இரு கட்ட நடவடிக்கைகளும் இலங்கையில் இருக்கும் பெரும்பாலும் அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடிந்த ஒன்றாகும். அதற்கான இணக்கங்களை பெரும்பாலான அசியல் கட்சிகள் யாவும் தெரிவித்திருப்பது குறித்து நான் தமிழ் பேசும் மக்களின் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இந்த இரு கட்ட நகர்வுகளும் அனைத்து இன மக்களுக்கும் சமாதானம் குறித்த ஒரு நம்பிக்கையான சூழலை தோற்றுவிப்பதற்கு அடிப்டையாக அமையும்.
அடுத்த கட்டமாக, அரசியலுரிமை தீர்விற்கான இறுதிக்கட்டமாக அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டின் மூலம் இறுதித்தீர்வினை இலகுவாக எட்டி விட முடியும்.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என அனைத்து இன மக்களும் சம உரிமைகளோடு சம பிரஜைகளாக, சமாதான சகவாழ்வு வாழும் காலத்தை உருவாக்க முடியும்!...அதற்கான முன்னெடுப்புகளை தொடர முடியும்!....
சர்வ கட்சிகளும் கலந்து கொள்ளும் இறுதித் தீர்விற்கான மூன்றாவது கட்ட முயற்சியின் போது இதய சுத்தியோடு வன்முறை அரசியலை கைவிடும் பட்சத்தில் புலிகளும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இது தான் ஈ.பி.டி.பி கொண்டிருக்கும் நடை முறைச்சாத்தியமான அணுகு முறை. இதை நடை முறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தையும் ஆதரவையும் சமாதானத்தையும் சகவாழ்வையும் இன ஐக்கியத்தையும் விரும்பும் அனைத்து தரப்பிடமிருந்தும் நாம் எதிர்பார்க்கின்றோம்.
மக்களின் அவலங்கள் குறித்து அக்கறை கொள்ளாமல், அக்கறைபோல் நடித்து கொண்டு, மக்களிடம் வந்து மோசடித்தேர்தல் நடத்தி வாக்கெடுத்து போனவர்கள் மக்களுக்காக எதையும் சாதிக்கப்போவதில்லை. தமிழ் பேசும் மக்களை வாழ வைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் இவர்களிடம் எந்த திட்டங்களும் இல்லை என்பதை நான் இந்த சபையின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.
மக்களின் அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தாமும் காரணமாக இருந்து விட்டு, அதற்கு காரணமான புலிகளை தோள்களில் தூக்கி வைத்து கூத்தாடிக்கொண்டு மக்களின் அவலங்கள் குறித்து பேச விளையும் போலி அரசியல் தலைமைகள் குறித்து தமிழ் பேசும் மக்களும் சமாதான விரும்பிகளும் விழிப்படையத்தொடங்கிவிட்டார்கள்.
எமது மக்களை வாழ வைப்பதற்கும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஈ.பி.டி.பி யினராகிய நாங்கள் கடினமான உழைத்து வருகின்றோம். வெளிப்படையாக மக்கள் முன்வந்து அழிவு யுத்தத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை சகல வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளுக்கும் தங்களது சமாதானத்தின் மீதான விருப்பையும், யுத்தத்தின் மீதான வெறுப்பையும் அவர்கள் வெளிப்படுத்த முன்வர வேண்டும்.
அரசியலுரிமைக்கும், அமைதிக்கும் சமாதானத்திற்கும் தடையாக இருப்பது புலித் தலைமையின் யுத்தவெறிதான் பிரதான காரணம் என்பதை வெளிப்படுத்தும் போது அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கிய எங்களது பயணத்தின் தடைகள் அகற்றப்பட்டு விடும்.
அதன் பின்னரும் தடைகள் இருக்குமாயின் வன்முறைகளற்ற வழிமுறையோடு உரிமைக்கு குரல் கொடுத்து உறவுக்கு கரம் கொடுத்து சுலபமாகவே அந்த தடைகளை நீக்கி விடலாம்.
அழகிய எங்கள் தாயக தேசத்தில் மக்களின் முகங்கள் மலர்ந்து சிரிக்க, மரணங்கள் இல்லாத ஒரு அமைதிப் பூங்காவில் அனைத்து இன மக்களும் சம உரிமை பெற்ற சுதந்தர பிரஜைகளாக முகமுயர்த்தி வாழும் பொற்காலத்தை உருவாக்கலாம்.
அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்துவோம்!
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பாது காப்போம்!
அரயசிலுரிமை சுதந்திரம் நோக்கி நடை முறைச்சாத்தியமான வழி முறையில் முன்னேறுவோம்!
இன்றே எழுந்திடுங்கள்! நாளை இதை விடவும் தடைகள் அதிகமாகலாம்!!
மத்தியில் கூட்டாட்சி!... மாநிலத்தில் சுயாட்சி!!
தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்!
என்றும் நாம் மக்களுக்காக!.....
05.09.2007.
No comments:
Post a Comment