Thursday, September 6, 2007

அரசாங்கம் தென்பகுதி மக்களை ஏமாற்றுகிறது - இ.இளந்திரையன்

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம் எனத் தென்பகுதி மக்களிடம் கூறி அவர்களை முட்டாளாக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே சிலாவத்துறையை அரசாங்கம் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களே தற்பொழுது இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும், மனிதநேயப் பணிகளைத் தவிர ஆயுதம் தாங்கிய போராளிகள் அங்கு இருக்கவில்லையெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

முக்கியமான விடயங்களைக் கருத்தில்கொள்ளாமல் அரசாங்கம் வெறுமனே கருத்துக்களைக் கூறுகிறது. இது எப்பவும் எமது முக்கிய இடமாக இருந்தது இல்லை. வெறும் கண்துடைப்பே என்றார் அவர்.

சிலாவத்துறைப் பகுதியில் மோதல்கள் இடம்பெறவில்லை. அது விடுதலைப் புலிகளின் மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடம். இது அரசாங்கத்தின் அரசியல் சதி என இளந்திரையன் அந்த ஊடகத்திடம் கூறியுள்ளார். மதவாச்சி-மன்னார் வீதியின் தென்பகுதியில் சிலாவத்துறை காணப்படுகிறது.

இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் என்பதால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அங்கு இல்லை. அரசியல் ரீதியான இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக அரசாங்கம் பொதுமக்களைப் பிழையாக வழிநடத்துகிறது என்றார் அவர்.

கடந்த காலங்களிலும் வன்னியைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தோல்வி கண்டமையை நினைவுகூர்ந்திருக்கும் இளந்திரையன், அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்த பல தடவைகள் முயற்சித்தார்கள் எது பயனளிக்கவில்லை. அரசாங்கம் வில்பத்து, சிங்கராஜ மற்றும் அதனை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றிவிட்டு அங்கு தேசியக் கொடியை ஏற்றி விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக மக்களை அரசாங்கம் ஏமாற்றப் போகிறது எனக் கூறினார்.

இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தே உயிலங்குளம் சோதனைச்சாவடியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விலகியது என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரயன் மேலும் தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்
http://www.tamilwin.net/article.php?artiId=4319&catId=&token=dispNews

No comments: